ஒரு நிமிடம்..! ஒரு துளி கண்ணீர்...! ஒரு வேளை பிரார்த்தனை..!



வண்ண வண்ண மின் விளக்குகளால்
மின்னும் மினாராக்கள்...
வித விதமான
அரேபிய பேரீச்சம் பழங்கள்,
பல ரகங்களில் பழ வகைகள் ...
பாத்திரம் வடிய நோன்பு கஞ்சி...
தாகம் தணிக்க குளிர் பழச் சாறு...
இப்தார் விருந்தால் இடமின்றி தவிக்கும்
பள்ளி வாசல்கள்...
அசைவ உணவின்றி முழுமை பெறாத
சஹர் நேர சாப்பாடு...

இவ்வாறாக பகலில் நோன்பும் மாலை நேரங்களில் கடை வீதிகளில் பெருநாள் துணி எடுப்பதுமாக நம்மிடையே கண்ணிய மிகு ரமலான் மாதம் கடந்து போய்க் கொண்டிருக்கிறது.

அருள்மிகு மாதத்தை நாம் ஆனந்தமாய் அனுபவித்து வரும் நிலையில் நம் சகோதர முஸ்லிம்கள் அஸ்ஸாம், மியான்மர், சிரியா, பாலஸ்தீனம், இராக் மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளிலும் அனுபவித்து வரும் இன்னல்களை கவனிக்கத் தவறிவிட்டோம். எனவே தான் அவர்கள் படும் துன்பங்கள் நம் உள்ளத்தில் எந்த வித உருத்தளையும் ஏற்படுத்தவில்லை.
                                                            
புனித ரமளானை இறையில்லங்களில் கழிக்க வேண்டிய  முஸ்லிம்கள்  இன்று நிவாரண முகாம்களில் இருட்டறையில் தங்கள் வாழ்நாட்களை கழித்து வருகின்றனர். நாம் நோன்பு துறக்க கஞ்சி குடித்து வரும் நிலையில், அங்குள்ள மக்கள் நோன்பு  வைக்கவே கஞ்சியின்றி பட்டிணி கிடந்து வருகின்றனர்.

பெருநாள் நெருங்கி வரும் நிலையில் நம் குடும்பத்திற்காகவும் குழந்தைகளுக்காகவும் புத்தாடைகளை எடுப்பதற்காக கடை கடையாக ஏறி இறங்கி கொண்டிருக்கிறோம். ஆனால் அஸ்ஸாம், மியான்மரில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் குடும்பத்தினர் உடுப்பதற்கு மாற்று துணி கூட இல்லாமல் கிழிந்த ஆடைகளுடன் வாழ்ந்து வருகின்றனர். ஆயிரக்கணக்கான குழந்தைகள் அநாதைகளாகி விட்ட நிலையில் நூற்றுக்கனக்கான இளம் பெண்கள் தங்கள் கணவர்களை துப்பாக்கி  குண்டுகளுக்கு  பலி கொடுத்து விட்டு விதவைகளாக கண்ணீர் வடித்து வருகின்றனர். குடியிருந்த இல்லங்கள் தீக்கிரையாக்கப்பட்டுவிட்டதால் வானமே கூரையாக தங்கள் வருங்காலத்தில் தாட்ட வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

பல இடங்களிலும் நோன்பு துறக்கும் நிகழ்ச்சிகள் பிரியாணி விருந்துடன்
உணவு திருவிழாவாக விமர்சையாக கொண்டாடப்படும் நிலையில் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்த மக்களுக்கோ சரியான உணவு கூட கிடைக்காமல் பரிதவித்து வருகின்றனர். பசியால் அழும் குழந்தைகளுக்கு கால் வயிறு உணவு அளிக்கக் கூட வழியில்லாமல் பெற்றோர்கள் சாப்பாட்டுத் தட்டுடன் அல்லாடிக் கொண்டிருக்கின்றனர்.

நம் செல்லப் பிள்ளைகள் மீது உச்சி வெயில் பட்டாலே உள்ளமெல்லாம் கொதிக்கிறது. ஆனால் மியான்மரில் பல பச்சிளம் குழந்தைகள் கொடூரமான தீக்காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்கள். ரமலான் நோன்பை கூட நிம்மதியாக வைக்க முடியாமல் தங்கள் ஈமானையும், உயிரையும் காப்பாற்றிக்கொள்ள முஸ்லிம் சகோதரர்கள் அகதி முகாம்களில் அடைபட்டுக் கிடக்கின்றனர். இருண்டு போன எதிர்காலத்தையும் அழிந்து போன நிகழ்காலத்தையும் எண்ணி வெட்ட வெளியில் நிர்கதியாக நின்று கொண்டிருக்கின்றனர்.

 சொந்த நிலத்தையும், சொந்த பந்தங்களையும் இனக் கலவரங்களில் இழந்து விட்டு வயதான பெற்றோரையும் குழந்தைகளையும் தூக்கிக் கொண்டு ஒதுங்க இடமில்லாமல் நாடோடிகளாக அலைந்து கொண்டிருக்கும் மக்களுக்காக புண்ணிய மிகு மாதத்தில் உடனடியாக நாம் செய்ய வேண்டியது ஒரு நிமிடம் மனதார சிந்தும் ஒரு துளி கண்ணீரும் அவர்களில் பாதுகாப்பிற்காக இறைவனின் முன்பு உளமாற கேட்கும் ஒரு வேளை பிரார்த்தனையும் தான்.

இஸ்லாத்தின் எதிரிகளிடமிருந்து நம் அனைவரையும் வல்ல இறைவன் பாதுகாப்பானாக! ஆமீன்.


நன்றி- A.H.கலீல் ரஹ்மான் 


0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!