கொளுந்துவிட்டு எறிந்த கட்டிடங்கள்; சிதறி நொறுங்கி கருகி தரைமட்டமாகி கிடக்கின்றன. தீயின் கோர பிடிக்குள் சிக்கி, வெடித்து சிதறிய வெடி மருந்துகளுடன் பிய்த்து எறியப்பட்ட மனித உடல்களும் உறுப்புகளும் சிதறிக் கிடக்கின்றன. குட்டி ஜப்பான் என்று சொல்லப்படும் சிவகாசியில் தான் இந்த கொடூரம் அரங்கேறியது.
தமிழ் நாட்டின் விருதுநகர் மாவட்டம் சிவகாசிக்கு அருகில் முதலிப்பட்டி என்ற ஊரில் ஓம்சக்தி ஃபயர் ஒர்க்ஸ் என்கிற பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட கோர விபத்தில் 38 தொழிலாளர்கள் பலியாகினர். மேலும் 50 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.
ஹிரோசிமா நாகசாஹி போல் காட்சியளிக்கும் இந்த முதலிப்பட்டி கிராமத்தில் என்ன நடந்தது? சுமார் 1500 பேர் வசிக்கும் இக்கிராமத்தில் 60 அறைகளுடன் கட்டப்பட்டுள்ள ஓம்சக்தி பட்டாசு தொழிற்சாலை செயல்பட்டு வந்தது. இங்கு தயாராகும் பேன்சி வெடிகள் ரூ.100 முதல் 3500 வரை விற்பனையாகிறது. இந்தியாவின் வெடிபொருள் தயாரிப்பில் 90 சதவீதம் கையில் வைத்திருக்கும் சிவகாசி பகுதியில் ஆண்டுக்கு சுமார் ரூ.1600 கோடி வரை புரளும் இத்தொழிலால் நேரடியாக 1 லட்சம் பேரும், மறைமுகமாக 1.5 லட்சம் பேரும் வேலைவாய்ப்பை பெறுகின்றனர்.
இந்த அளவிற்கு வருவாயும் வேலை வாய்ப்பும் தரக்கூடிய தொழில் உற்பத்தியில் வேலை செய்பவர்களுக்கு போதிய பாதுகாப்பு வசதிகளோ, வெடிகள் தயாரிக்கும் பயிற்சிகளோ , விபத்துகள் ஏற்பட்டால் செயல்பட வேண்டிய அவசரகால நுணுக்கங்களோ ஊழியர்களுக்கு கற்று கொடுக்கப்படவில்லை. இலாபத்தை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படும் முதலாளிகள் தனது தொழிற்சாலையில் நிலை பற்றியோ அல்லது தரம் பற்றியோ சிந்திப்பதும் இல்லை. இவ்வாறு ஆரம்பிக்கப்படும் தொழிற்சாலைகளுக்கு உரிமம் கொடுக்கும் அரசு அதிகாரிகள் பின் விளைவுகள் என்ன? என்பதை பரீசிலிப்பதற்குள் கத்தை நோட்டுகள் கண்களை மறைத்து விடுகின்றன. இவை அனைத்தையும் முன் கூட்டியே அறிந்திருக்கும் அரசாங்கம் ஒரு கோர சம்பவம் நடந்து முடிந்த பின்பு தான் தனது நடவடிக்கைகளை எடுக்கின்றது.
சீயோன் மெட்ரிக் பள்ளி மாணவி சுருதி, கடந்த மாதம் தாம்பரத்தை அடுத்த முடிச்சூர் என்ற இடம் அருகே பள்ளி பேருந்தில் இருந்து ஓட்டை வழியாக கீழே விழுந்து இறந்து போனாள். இதற்கு காரணம் தனது வசதிக்காக பழைய பஸ்ஸிற்கு பழுது பார்த்து பயன்படுத்திய பள்ளி நிர்வாகம், பஸ்ஸில் மிகப் பெரும் குறைபாடு இருப்பது தெரிந்தும் அதற்கு அனுமதி அளித்த அரசு அதிகாரி, அனைத்தும் அறிந்தும் தனது வருமானதிற்காக பஸ்ஸை இயக்கிய ஓட்டுனர் என தவறு செய்தவர்கள் பட்டியல் நீள்கின்றது. இச்சம்பவம் நடந்த பிறகு அரசாங்கம் பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் பல விதிமுறைகளை கொண்டு வருகின்றது. அவை பயனளிக்குமா இல்லையா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இதே நிலை தான் சேசாத்ரி பள்ளி மாணவன் நீச்சல் குளத்தில் மூழ்கி பலியானதும்.
ஆனால் நெஞ்சை பதறவைக்கும் பட்டாசு ஆலை விபத்து நடந்திருப்பது இது முதல் முறை அல்ல. தொடர்சியாக இது போன்ற துயரங்கள் அரங்கேறி வருகின்றன. 1998ம் ஆண்டு சிவகாசியில் நடந்த பட்டாசு ஆலை விபத்தில் 150 பேர் பலியானார்கள் என்று கூறப்படுகிறது. 2002ம் ஆண்டு கோவில்பட்டியில் 16 பேர் பலி, 2005ம் ஆண்டு மீனாம்பட்டியில் 20 பேர் பலி, 2006ம் ஆண்டு பர்மா காலனியில் 12 பேர் பலி, 2007ம் ஆண்டு நாராயணபுரத்தில் 4 பேர் பலி, 2009ம் ஆண்டு மதுரை வடக்கம்பட்டியில் 19 பேர், நமஸ்கரித்தான்பட்டியில் 18 பேர், சிவகாசியில் 3 பேர், திருவள்ளூர் மாவட்டத்தில் 32 பேர் பலி, 2010ம் ஆண்டு சிவகாசியில் 8 பேர் பலி, 2011ம் ஆண்டு விருதுநகர், சிவகாசி, தூத்துக்குடியில் 14 பேர் பலி. ஆக மொத்தம் கடந்த 14 ஆண்டுகளில் நடந்த பட்டாசு ஆலை வெடிவிபத்துகளில் கிட்டத்தட்ட 300 பேர் வரை பலியாகியுள்ளனர் என்று கூறப்படுகிறது.
இவ்வாறு தொடர்சியாக மக்கள் இந்த கோர விபத்துகளில் பலியாகி இருந்தும் முறையான நடவடிக்கையோ? அல்லது மக்களின் உயிரை பாதுகாப்பதற்கான விதிமுறைகளோ சரியான விதத்தில் இல்லாதது தான் நாம் கண்ட இந்த கொடூரத்தின் உச்ச கட்டம். ஒவ்வொரு சம்பவம் நடந்தேறிய பின்பு அரசாங்கம் கொடுக்கும் நிவாரண பணம் உயிரை பறி கொடுத்த குடும்பதிற்கு போதுமானதாக இருக்குமா? நிச்சயம் அது ஒரு கண் துடைப்பு மட்டுமே.
இவ்வாறு உயிர் போன பின்பு கொடுக்கும் நிவாரண பணங்களை இது போன்று வறுமையில் உழலும் மக்களின் வாழ்வாதரத்தின் மாற்றதிற்கு பயன்படுத்தலாம், விபத்து நடந்த பிறகு எடுக்கும் அதிரடி நடவடிக்கைகளை முன் கூட்டியே நடைமுறை சாத்தியமாக்குவது ஒவ்வொருவரது கடமை.
இஸ்லாம் இது போன்ற அவலங்களுக்கு அரு மருந்தான தீர்வை தருகிறது. குடிமக்களின் வாழ்விற்கும் வழிமுறைக்கும் ஆட்சியாளர்களே பொறுப்பாளிகள். நல்ல ஒழுக்கத்துடன் கூடிய பண்பாடு மிகுந்த சமுதாயத்தை உருவாக்க வேண்டியது ஆட்சியாளரின் பொறுப்பு. ஏழை எளிய மக்கள், செல்வந்தர்கள், ஆண்-பெண், குழந்தைகள், விதவைகள், ஆதரவற்றோர் என குடிமக்கள் அனைவரும் நாட்டின் வளங்களில் சம உரிமை படைத்தவர்கள். இன்றைக்கு நம் நாட்டில் வளங்கள் எல்லாம் ஒரு சிலரால் அனுபவிக்கப்படுவதையும் மற்றவர்கள் அவர்களுக்கு சேவகம் செய்ய வேண்டும் என்பதையும் நடைமுறையில் பார்க்கிறோம்.
இதனுடைய விளைவு தான் அன்றாட வயிற்று பிழைப்பிற்காக உரிமைகளை இழந்த மக்கள் உயிரையும் இழந்து கொண்டிருக்கின்றனர். அன்றைய இஸ்லாமிய அரசியல் இதற்கு வழிமுறைகளை தந்துவிட்டு சென்றது.
இஸ்லாமிய அரசில் வறுமை அகற்றப்பட்டிருக்க வேண்டும். ஆட்சிமுறை, குடிமக்கள் குறித்து மறுமையில் இறைவனிடம் அரசன் பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளான். ஒழுக்கமும் பண்பாடும் இறையச்சமும் நிறைந்த அறிவு ஜீவிகளைக் கொண்ட நல்ல தலைமுறையை உருவாக்க வேண்டும்; குற்றங்கள் குறைந்த சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பதே இஸ்லாமிய அரசின் கொள்கையாக இருந்தது.
மனித இனத்திற்கு தீங்கு விளைவிக்கும் எதிலும் முஸ்லிம்கள் ஈடுபடவில்லை. ஈடுபடக்கூடாது என்று இஸ்லாம் ஆணித்தரமாக அறிவுறுத்துகிறது. ஆனால் இன்றோ மனித இனத்தின் அழிவிற்கும், இயற்கையின் அழிவிற்கும் தேவையான அத்துனை நடவடிக்கைகளும் பகிரங்கமாக வளர்ச்சி என்ற பெயரில் பணம் கிடைக்கிறது, சொகுசான வாழ்க்கை கிடைக்கிறது என்பதற்காக படித்தவர்களும் பட்டதாரிகளும் கூட மண்ணும் மக்களும் எக்கேடு கெட்டுப் போனால் நமக்கென்ன என்று ஆடம்பர வாழ்க்கையின் மோகத்தில் அத்தகைய செயல்களில் ஈடுபடுகின்றனர். இவர்களை மாற்ற நல்ல ஆட்சியும், ஆட்சியாளர்களும் தேவை. இதை அறிந்ததால் தான் மாகத்மா கூட இஸ்லாமிய சாம்ராஜியத்தின் இராண்டாம் கலீபா உமர் (ரலி) ஆட்சியை விரும்பினார் போலும்.
ஏன் என்றால் அவர்களைப் பார்த்து பணம் மட்டும்தான் வாழ்க்கையா? என்று இஸ்லாம் கேட்கிறது. நல்லவர்கள், நாட்டின் வளர்ச்சியில் நம்பிக்கையுள்ளவர்களும் கேட்கின்றனர். நாளை மறுமை நாளில் இறைவனும் கேட்பான் என்பதும் உறுதி.
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!