15 Sep 2012
புதுடெல்லி:டீசல் விலை உயர்வு மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு கட்டுப்பாடு ஆகியவற்றுக்கு எதிர்கட்சிகளும், பல்வேறு அமைப்புகள், பொதுமக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். விலை உயர்வால் நாடு முழுவதும் மத்திய அரசின் அராஜக நடவடிக்கைக்கு எதிராக எதிர்ப்பு வலுத்து வருகிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளும், இடதுசாரிகள், பா.ஜ.க உள்ளிட்ட எதிர்கட்சிகளும் விலை உயர்வை கடுமையாக கண்டித்துள்ளனர். பல்வேறு நகரங்களில் இன்று(சனிக்கிழமை) கண்டனப் பேரணிகளும்,போராட்டங்களும் நடைபெறுகின்றன.
விலை உயர்வைத் திரும்பப் பெறாவிட்டால் கடும் நடவடிக்கைகளை எடுக்கத் தயங்க மாட்டோம் என்று சமாஜ்வாதி கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறுகையில், “தொடர்ந்து பெட்ரோல் விலைகள் உயர்த்தப்படுவதால் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ள சாமானிய மனிதன் அரசின் இப்போதைய முடிவால் மேலும் சிரமத்துக்குள்ளாவான். இந்த மக்கள் விரோத நடவடிக்கையை அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும்,” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கேரள முதல்வர் உம்மன் சாண்டி கருத்து தெரிவிக்கையில், “டீசல் விலையை உயர்த்தியதை அரசு தவிர்த்திருக்க வேண்டும். இந்த விலை உயர்வை முழுவதுமாகத் திரும்பப் பெறுவது கடினம் என்றால், உயர்த்திய விலையைச் சற்று குறைக்க அரசு முன்வர வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.
கேரளாவில் எதிர்கட்சிகள் இன்று(சனிக்கிழமை) விலை உயர்வை கண்டித்து முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன.
சோசியல் டெமோக்ரேடிக் பார்டியின் தேசிய தலைவர் இ.அபூபக்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; “டீசல் விலை உயர்வு மற்றும் சமையல் எரிவாயுவின் மானியம் வெட்டிக்குறைப்பு ஆகியன மக்களுக்கு மத்திய அரசு விடுத்துள்ள சவால்” என கூறியுள்ளார்.
மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி விடுத்துள்ள அறிக்கையில், “விலை உயர்வு சாமானிய மக்களை வெகுவாகப் பாதிக்கும் என்று குறிப்பிட்டார். இந்த விலையேற்றத்தைத் தவிர்க்க வேண்டுமெனில், மாநில அரசுகள் வசூலிக்கும் வரி வருவாயை மாநிலங்களே பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியின்(சி.பி.எம்) பொலிட் பீரோ உறுப்பினர் பிருந்தா காரட் கூறுகையில், “மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் அனைத்துப் பொருள்களின் விலையும் உயர்ந்து மக்கள் ஏற்கெனவே கடும் நெருக்கடியில் உள்ளனர். இப்போது டீசல் விலையை உயர்த்தி அவர்கள் மீது மேலும் சுமை ஏற்றியுள்ளது மத்திய அரசு.
தவிர்க்க முடியாத சூழ்நிலையில்தான் விலை உயர்த்தப்படுகிறது என்று கூறுவது பொய். இது மக்களை மிகப்பெரிய அளவில் ஏமாற்றும் வேலை. ஏனெனில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அனைத்தும் லாபத்தில்தான் செயல்படுகின்றன. அவற்றின் நிதிநிலை அறிக்கையிலேயே இது தெரியவந்துள்ளது. உணவுப் பாதுகாப்பு, விலை உயர்வை கட்டுக்குள் வைப்பது என அனைத்துத் துறைகளிலும் மத்திய அரசு தோல்வியடைந்துவிட்டது. இது தவிர தொலைத்தொடர்புத் துறை, நிலக்கரி சுரங்கம் போன்றவற்றில் பல லட்சம் கோடி மதிப்பிலான தேச வளங்களை தனியார் நிறுவனங்கள் கொள்ளையடிக்க அனுமதித்து, ஆட்சியாளர்களும் லாபமடைந்துள்ளனர். இதனைக் கொண்டு பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றி பல கோடி மக்களின் வாழ்வை சுபிட்சமாக்கியிருக்க முடியும்.
கேஸ் சிலிண்டர் விநியோகத்துக்கு கட்டுப்பாடு விதித்து மக்கள் வயிற்றில் அடித்துள்ளனர். இதனை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாடு தழுவிய அளவில் போராட்டங்கள் நடத்தப்படும்.” என்று தெரிவித்துள்ளார்.
ஐ.மு அரசில் இடம்பெற்றுள்ள தி.மு.கவின் தலைவர் மு.கருணாநிதி விடுத்துள்ள அறிக்கையி, “ஏற்கனவே அத்தியாவசியப் பொருட்களின் கடும் விலை உயர்வினால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை – எளிய, நடுத்தர மக்களை, இந்த டீசல் விலை உயர்வு பெரிதும் பாதிக்கும். எனவே மத்திய அரசு இந்த அறிவிப்பினை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும். மேலும், ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் மட்டுமே ஒரு குடும்பத்திற்கு வழங்கப்படும் என்று செய்யப்பட்டுள்ள அறிவிப்பும் உடனடியாகத் திரும்பப் பெறப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.’’ என்று தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!