9 Aug 2012

புதுடெல்லி:அஸ்ஸாமில் நடைபெற்ற இனக்கலவரம் தொடர்பாக விசாரணைச் செய்யும் பொறுப்பு மத்திய புலனாய்வு நிறுவனமான சி.பி.ஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே மக்களவையில் அறிவித்தார்.
அஸ்ஸாம் வன்முறைக்கு வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாகக் குடியேறியவர்களே காரணம் என்றும் அஸ்ஸாம் இனக்கலவரம் குறித்து அவையை நிறுத்திவிட்டு விவாதிக்கவேண்டும் என்று காலையில் பா.ஜ.க தலைவர் எல்.கே.அத்வானி ஒத்தி வைப்பு தீர்மானத்தின் மீது பேசினார். ஐந்து மணிநேரத்திற்கும் மேலாக நடத்தப்பட்ட விவாதத்திற்கு பிறகு பா.ஜ.க. கொண்டுவந்த ஒத்திவைப்புத் தீர்மானம் குரல் வாக்கு மூலம் தோற்கடிக்கப்பட்டது.
பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் துவங்கிய முதல் நாளே இரு அவைகளிலும் எதிர்கட்சிகள் அஸ்ஸாம் பிரச்சனையை குறித்து கேள்வி எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.
கே.எல்.ஒ தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 முஸ்லிம்கள் கொலைச் செய்யப்பட்டதைத் தொடர்ந்து பிரச்சனைகள் உருவானதாக ஷிண்டே விளக்கமளித்தார்.
மேலும் ஷிண்டே கூறியது: மத்திய, மாநில அரசுகள் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளன. மீண்டும் பிரச்சனை உருவானால் தலையிட தயார் நிலையில் இருக்கும்படி ராணுவத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சி.பி.ஐ கூடுதல் இயக்குநர் ஜெனரல் இன்று குவஹாத்தி செல்வார். உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளரும் சி.பி.ஐ கூடுதல் இயக்குநருடன் அஸ்ஸாம் செல்வார்.
73 பேர் அஸ்ஸாம் கலவரத்தில் பலியாகியுள்ளனர். 50 பேருக்கு காயமேற்பட்டுள்ளது. இரு சமுதாய தலைவர்களிடமும், அமைதியை ஏற்படுத்த தலையிடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று ஷிண்டே தெரிவித்தார்.
அஸ்ஸாம் கலவரத்திற்கு வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களே காரணம் என்றும், போடோக்களை அவர்களின் சொந்த மண்ணில் இருந்து துரத்துவதற்கான முயற்சி என்றும் ஆகையால் அரசு இந்தியாவில் சட்டவிரோத குடியேற்றக்காரர்கள் குறித்த புள்ளிவிபரங்களை அவையில் தாக்கல் செய்யவேண்டும் என்று அத்வானி கோரிக்கை விடுத்தார்.
ஆனால், சட்டவிரோத குடியேற்றக்காரர்கள்தாம் அஸ்ஸாமில் வன்முறைக்கு காரணம் என்ற அத்வானியின் கருத்து தவறு என்று சி.பி.எம் உறுப்பினர் பசுதேவ் ஆச்சார்யா கூறினார்.
“அஸ்ஸாமில் கலவரம் நடக்கும்பொழுது மாநில அரசு தூங்கிக் கொண்டிருந்தது. நான் அஸ்ஸாமில் கலவரம் நிகழ்ந்த பகுதிகளில் பயணித்தேன். ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் மீது மட்டுமே தாக்குதல் நடந்துள்ளது. போடோ கிராமங்களில் ஒரு வீடு கூட தாக்கப்படவில்லை. அஸ்ஸாமில் வசிப்பவர்கள் இந்தியர்களே. அவர்களை வெளிநாட்டவர்கள் என்று அழைப்பது சரியல்ல” என்று பசுதேவ் ஆச்சார்யா தெரிவித்தார்.
அத்வானியின் கருத்தை லாலுபிரசாத் யாதவும் கடுமையாக விமர்சித்தார். “லுங்கி கட்டியதாலோ, முஸ்லிம் என்றாலோ யாரும் பங்களாதேசத்தவர்கள் ஆகமாட்டார்கள்” என்று லாலு காட்டமாக தெரிவித்தார்.
அத்வானியின் கருத்தை திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்களும் கடுமையாக எதிர்த்தனர். போடோக்களிடமிருந்து ஆயுதங்களை பறிமுதல் செய்ய ஆயுதப் படையை அஸ்ஸாமில் நியமிக்கவேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையில் கோரிக்கை எழுப்பினர்.
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!